மெய்ப்பொருளியல் பேசுவோம்
நவீன உலகில் நமது சிந்தனைப் பரப்பு அத்துமீறிய ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. ஆனால் வேடிக்கை என்னவென்றால் இந்த அத்துமீறல் தனிமனிதர் ஒவ்வொருவர் அனுமதியோடும் நடக்கிறது. சிந்தனையில் தெளிவு பிறந்தாலொழிய நம் பிறவியின் நோக்கமும், பயனும், உய்வும் மெய்ப்படா.
சிந்தனைத் தெளிவு இரண்டு வகையில் ஒரு மனிதனுக்குக் கிடைக்கும்.
வாழ்வில் முழுமையாக ஈடுபடுதல். தனக்கு வாய்த்துள்ள சுற்றம், நட்பு, குடும்பம், சமூகம், அரசியல் இவை அனைத்தையும் தனது பிறப்புச் சூழலுக்காக அமைக்கப்பட்டவை என்பதைப் புரிந்து கொண்டு நேர்மறையாகவும், உற்சாகத்துடனும் வாழ்வது. இத்தகைய வாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு சிக்கல்களில் இருந்தும் தான் விலகாமல், சிக்கல்களோடு போராடி அவற்றை விலக்க முயற்சிப்பது, பிறருக்கான இன்னல்களைக் களைய தனது முயற்சியை, உழைப்பை அளிப்பது.
அறிவைப் பெருக்க கல்வியைக் கைக்கொள்வது. கல்வி ஒரு தொடர் நிகழ்வு என்பதைப் புரிந்து கொண்டு, பிறவியின் கசடு அறுக்க ஞானியர் நூல்களை ஆராய்ந்து, படித்து அவற்றை மேற்சொன்ன வாழ்வோடு பொருத்திப் பார்த்து தொடர்ந்து விசாரம் செய்வது.
இவ்விரண்டில் முதல் வகை, நமது வாழ்க்கை என்ற வகையில் இயல்பாக நம்மை இயங்க வைத்துக் கொண்டிருப்பது. இரண்டாவதான ஞானியர் நூல்களைக் கற்றுக் கொள்வதற்கு இப்பிரபஞ்சத்தின் பல்வேறு சக்திகள் ஒன்றிணைந்து அதற்கான சூழலும், வாய்ப்புகளும் அமைய வேண்டியிருக்கிறது. ஆனால், முதல் வகையில் நம்மை நாம் ஆயத்தப்படுத்திக் கொண்டால், இரண்டாவதான ஞான நூல்களைப் பயில்வது என்பது எளிமையாக, நமது உழைப்பு இல்லாமலேயே கைவரும்.
அறிவியலும் மெய்ப்பொருளும்:
இன்று இணையத்தில் எங்கெங்கு நோக்கினும் அறிவியலும், ஆன்மிகமும் ஒன்றுக் கொன்று மோதிக் கொள்வதைக் காண முடியும். கட்டுரைகள் தொடங்கி காணொளிகள் வரை பகுத்தறிவும், எதார்த்த சிந்தனைகளும் ஆழ வேரூன்றிப் பரவுதல் சமூகத்தின் வளர்ச்சியைக் காட்டும் ஒரு நல்ல அறிகுறி.
ஆனால் பகுத்தறிவும், விஞ்ஞானமும் எவ்வளவு தெளிவாக மூடநம்பிக்கைகளையும், சடங்குகளையும், தகர்த்து எறிந்தாலும் இவற்றால் ஈர்க்கப்படும் மக்கள் கூட்டம் என்றும் பெருகிக் கொண்டே வருகிறது. காரணம் மிக எளிமையானது.
நம்புபவன் சிந்திப்பதில்லை. சிந்திப்பவன் நம்புவதில்லை.
ஆனால் இவ்விரண்டு கோஷ்டிகளுள் ஒருவராக நீங்கள் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. இவ்விரண்டு தர்க்கங்களுக்குள் ஏதேனும் ஒன்றில் நீங்கள் சிக்கிக் கொண்டால் சிந்தனையில் தெளிவு கிடைப்பது அரிது.
பகுத்தறிவும், நம்பிக்கையும் சந்திக்கும் ஒரு நடு, இருக்கத்தான் செய்கிறது. அதுவே வள்ளுவன் எனுமோர் தமிழ் ஆன்ம மெய்ஞானி உலகுக்கு எடுத்துச் சொன்ன மெய்ப்பொருள்.
மெய்ப்பொருள் என்றால் என்ன?
மெய்ப்பொருள் நம்பிக்கைகளுக்கும், சடங்குகளும், போலித்தனங்களுக்கும் அப்பாற்பட்டது. நிலையானது. அறிவின் வளர்ச்சியில் ஆக்கம் பெறுவது.
மெய்ப்பொருள் பயில நம்பிக்கை அவசியமற்றது, தேடலும், கேள்விகளும் மட்டுமே அடிப்படைத் தகுதிகள். அறமே மெய்ப்பொருளை அடைய உதவும் கலமும், கலங்கரை விளக்கமும்.
ஒரு தனிமனிதனின் உடலுக்கு உள்ளே இயங்கும் உறுப்புகள் எனும் உயிர்த்தொகுப்பு, அவற்றோடு இயங்கும் அறிவு, மனம் போன்ற புலன்கடந்த கருவிகள், உடலுக்கு வெளியிருந்து உள்ளே சென்று ஆற்றல் பெருக்கும் உணவு, உணவுக்கான உழைப்பு, உழைப்பைச் செலுத்தும் சமூகம், சமூகத்தின் மக்கள், அதில் தனிமனிதன் இயங்க ஆதாரமாக இருக்கும் நட்பு, குடும்பம், வாழ்க்கைத் துணை, பகை இவற்றை நெறிப்படுத்தும் தலைமையாக அரசு, இவை அனைத்திற்கும் ஆதாரமான இயற்கை, சுற்றுச்சூழல், இவை அனைத்தையும் கடந்தும், இவற்றைத் தாங்கியும் விரியும் பெருவெளி என ஒன்றுக்கொன்று தொடர்புபட்டு, சார்ந்து இயங்குவதே வாழ்க்கை என்ற நிலைத்த உண்மையே மெய்ப்பொருள் ஆகும். இதனை மிக ஆழமாகப் புரிந்து வைத்திருந்த மனிதக் கூட்டம், தமிழினம் என்ற பேர் கொண்ட நமது முன்னோர்களே.
இந்த மெய்ப்பொருள், அறத்தின் வாயிலாக உணர்வுப்பூர்வமானதாக கைவரும். அறம் சிந்தனையில் விதைக்கப்பட வேண்டும். சிந்தனையில் அறம் விதைக்க, கல்வி எளிமையாக வேண்டும்.
மனித இனத்தின் ஒட்டுமொத்த வரலாற்றையும், நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் இணைக்கக் கூடிய ஒரு பாலமே மெய்ப்பொருள்.
உலக வரலாற்றில் அறிவாராய்ச்சி மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. உலகின் ஒவ்வொரு நாட்டைச் சேர்ந்தவரும் அறிவைப் பற்றிய வெவ்வேறு புரிதல்களை வெளிப்படுத்தியிருக்கிறார்கள், பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் தமிழர்கள் அறிவாராய்ச்சியில் ஒரு மகத்தான சாதனை படைத்திருந்தார்கள், உலகம் அறிவைப் பற்றி சிந்திக்கத் தொடங்கும் முன்பாகவே.
அறிவின் முழுமை நோக்கிய பயணமே அறம் எனும் புரிதலே அது. உலக நாட்டவர்கள் பிறர் யாவரும் அறிவை ஒரு தனி கருவியாகப் பார்த்தார்களே ஒழிய அறிவை அறத்துடன் இணைத்துச் சிந்திக்கத் துணியவில்லை. அதனாலேயே அவர்களது அறிவு வளர்ச்சி பற்றிய திட்டங்கள் அதிவேகமானதும், விவேகமற்றதும், ஆபத்தானதுமாக இருக்கிறது.
அறிவைப் பற்றிய விளக்கம் சொல்லத் தமிழ் ஞானியர்களுக்கு இருந்த தகுதி:
அறிவைப் பற்றிய standard definition தேவைப்படுகிறது. யாரால் கொடுக்க முடியும்?
ஆப்பிளை மேலே தூக்கிப் போட்டு, கீழே வந்த உடன் புவியீர்ப்பு விசையை நான் அனுபவித்தவனாகிறேன். நான் புவியீர்ப்பு விசை பற்றி ஒரு விளக்கத்தைச் சொல்ல முடியுமா? இல்லை, அதனை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து, அதில் உள்ள இயற்பியலை உழைப்பின் மூலமாக அறிந்து கொண்ட ஒரு விஞ்ஞானி சொல்லலாம்.
போலவே, அறிவைப் பற்றிய ஒரு standard definition ஐ யார் சொல்லலாம்?
அறிவை எது ஆதிக்கம் செய்கிறதோ, அதனை கட்டுப்படுத்தி அதன் மூலம் அறிவின் முழுமையை அடைந்த ஒருவன் தானே சொல்ல முடியும்?
அறிவை கட்டுப்படுத்துவது மனம். மனம் என்ன செய்ய நினைக்கிறதோ அதற்கு ஒத்துழைப்பது அறிவு. எனவே மனதைக் கட்டுப்படுத்தி அறிவை விளக்கியவர்கள் தான் திருவள்ளுவர் தொடங்கி, அவ்வையார், காரைக்கால் அம்மையார், திருஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்க வாசகர், தாயுமானவர், அருணகிரிநாதர், சோமசுந்தர நாயகர், பாம்பன் சுவாமிகள் தொட்டு கடந்த நூற்றாண்டின் வள்ளலார் வரை. ஆனால் நம்மைப் பொறுத்த வரை இவர்களெல்லாம், சாமியார்கள். தத்துவஞானி, philosopher என்ற உடன், plato, socrates, kant, russell, இவர்களெல்லாம் நம் நினைவுக்கு வருவார்கள், ஆனால் திருவள்ளுவரை, அவ்வையாரை சொல்லத் தோன்றாது.
அந்த அளவிற்கு நம் மண்ணில் தோன்றிய தத்துவ மரபிற்கும் நமக்கும் இடையே பெரும் பிளவு ஏற்பட்டு விட்டது. இந்தத் தத்துவ மரபு மீண்டும் நம் சிந்தனையில் விதைக்கப்பட்டாலொழிய நமது எதிர்காலம் மட்டுமல்ல, ஒட்டு மொத்த மனித இனத்தின் எதிர்காலமுமே நிலைப்பது அரிது.
இந்தக் குறையை நீக்கவே மெய்ப்பொருள்.wiki எனும் இத்தளம் துவங்கப்பட்டுள்ளது.
தமிழினம் உலகுக்கு அளித்த கொடையாக இருக்கக்கூடிய, தமிழனின் உண்மையான பெருமையாகிய மெய்ப்பொருளியல் மற்றும் அறம் இவற்றைப் பற்றிய ஒரு அறிவுக் களஞ்சியத்தை உருவாக்கி, அதனைப் பொதுமைப்படுத்தவும் எளிமைப்படுத்தவும் இணையத் தமிழ் அன்பர்கள் முன்வர கேட்டுக் கொள்கிறேன்.
கட்டுரைகள் எழுதுவோம், காணொளிகள் படைப்போம், வெறும் ஆவணங்களாகவும், ஏடுகளாகவும் இருக்கும் நம் தத்துவப் பொக்கிசங்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவோம். அறம் மலர பாடுபடுவோம். ஒன்றிணைவோம், வாருங்கள்.
Comments